Friday 22 April 2011

இறைவார்த்தை குணமளிக்கிறது


வீட்ல பையன் நேரமாகியும் தூங்கிக்கொண்டிருந்தான். அம்மா பையனை எழுப்பியும் எழுந்திருக்க வில்லை. இறுதியாக இயேசு சொன்னதுபோல சொன்னால் செய்வானோ என நினைத்துக் கொண்டு, “மகனே! உன் படுக்கையை எடுத்துக்கொண்டு போ” என்றார். மகன் மட்டும் குறைஞ்சவனா! அம்மா! எனது நேரம் இன்னும் வரலையம்மா என பதில் கூறினான்.

சிலர் படிக்கும்முன்போ, ஊருக்கு போகுமுன்போ (அ) மற்றநேரங்களில் விவிலியத்தை புரட்டுவார்கள். கண்களை மூடிக்கொண்டே திறப்பார்கள். கைலைத்து அந்த பகுதியை வாசிப்பார்கள். அப்படி ஒருத்தன் மனக்கஷ்டத்துல விவிலியத்தை பிரித்து படித்தான். அதில் மத் 27:5-ல் அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக்காசுகளை கோவிலில் எறிந்துவிட்டு, புறப்பட்டு போய்த் தூக்குப்போட்டுக் கொண்டான்” என்றிருந்தது. இது சரியல்ல நினைத்து, மீண்டும் மூடி திறந்து படித்தான். அதில் லூக் 10:37-ல் “நீரும்போய் அப்படி செய்யும்” என்றிருந்தது. மனக் கஷ்டத்துடன் மூன்றாம்முறை மூடிதிறந்தான். யோவான் 13:27-ல் நீ செய்ய விரும்புவதை விரைவில் செய்” என்றிருந்தது.

இன்று இறைவார்த்தை பலவிதங்களில் புரிந்துகொள்ளப்படுகின்றன. சிலநேரங்களில் தவறாகவும் புரிந்துகொள்கின்றனர். ஆனால் இறைவார்த்தை வாழ்வளிக்கிறது. வழிகாட்டுகிறது, நம்பிக்கையளிக்கிறது, ஆற்றலலிக்கிறது, விடுதலை அளிக்கின்றது. என பலவழிகளில் இறைவார்த்தையை பற்றி சிந்திக்கின்றோம். இதனடிப்படையில் இன்று இறைவார்த்தை குணமளிக்கிறது என்று சிந்திக்கிறோம்.
ஏசாயா 55:10-11-ல் வாசித்தோமெனில் “மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன. அவை நிலத்தை நனைத்து முறை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல் அங்கு திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தை, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை”.

ஆம் அன்பார்ந்தவர்களே! இறைவனிடமிருந்து புறப்பட்டுவரும் இறைவார்த்தை குணமளிக்கிறது. இருவிதத்தில் குணமளிக்கிறது. ஒன்று, உடல் நோயிலிருந்து இறைவார்த்தை குணமளிக்கிறது. இரண்டு, மனநோயிலிருந்து குணமளிக்கிறது.
முதலாவதாக இறைவார்த்தை உடல்நோயிலிருந்து குணமளிக்கிறது. இதற்கு பலசான்றுகள் விவிலியத்தில் உண்டு. இயேசுவின் வாழ்வின் செயல்பாடுகளை பார்க்கின்றபோது, பல நேரங்களில் குணமளிக்கின்ற மருத்துவப் பணியைச் செய்திருக்கின்றார்.
விடுதலை பயணம் 15:26-ல் “உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீ அக்கறையுடன் செவிசாய்த்து அவர் பார்வையில் நலமாக தோன்றுவதைச் செய்து, அவர் கட்டளைகளைக் கைக்கொண்டால், நான் எகிப்திற்கு வரச்செய்த கொள்ளை நோய்களை உன்மேல் வரவிடமாட்டேன். ஏனெனில் நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர் என்கிறார்.
இணைச்சட்டம் 32:39-ல் “நானே இருக்கிறவர்.... எனத் தொடர்ந்து கூறுகிறார் “குணமாக்குபவரும் நானே” என்கிறார். திருப்பாடல் 103:23-ல் “என் உயிரே! ஆண்டவரை போற்றியும்! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே. அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார். உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.” இறைவாக்கினரது வார்த்தையில் நம்பிக்கை வைத்து ‘நாமான்’ குணமடைந்ததை 2 அரசர் 5-ம் அதிகாரத்தில் பார்க்கின்றோம்.
புதிய ஏற்பாட்டிற்கு வருகின்றபோது இயேசு பல புதுமைகள் அற்புதங்கள் செய்து மக்களை நோயிலிருந்து குணமளித்துள்ளார் என்பது பார்க்க முடியும்.
மத் 8:16-ல் பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிபோயின. மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினார்”.
லூக் 7:6-ல் நூற்றுவர் தலைவர் தம் பணியாளனை குணமாக்கவந்த இயேசுவிடம் “நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை, ஆனால் ஒரு வார்த்தை சொல்லும். என் ஊழியர் நலமடைவர்” என்கின்றார்.
மத் 4:23-ல் “அவர் கலிலேயட் பகுதி முழுவதும் சுற்றி வந்தார். அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார். விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார். மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்”.
இவ்வாறு இயேசுவின் குணமாக்கும் செயலை சொல்லிக்கொண்டே போகலாம். தன்னுடைய வார்த்தையினால், கட்டளையினால் நோய்களை நீக்கினார், பேய்களை ஓட்டினார். இத்துனை செயல்களிலும் இயேசு விரும்புகிறேன் என்றும், செய்ய முடியும் என நம்புகிறாயா என்று வினவியும் குணப்படுத்தினார் என்பதை பார்க்க முடியும்.
இரண்டாவதாக, மனநோயிலிருந்து குணப்படுத்தினார். இஸ்ராயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்து வேதனைப்பட்டப்போது உள்ளத்தில் வேதனையும், உடலில் சோர்வும், எதிர்காலம் பற்றிய கேள்வியிலும் வாழ்ந்து வந்தனர். இந்த நேரத்தில் எகிப்தில் என் மக்களின் கூக்குரலை கேட்டேன், அவர்களை விடுதலை செய்து பாலும், தேனும் பொழியும் கானான் தேசத்தில் சமர்த்துவேன் என்று ஆறுதல் சொல்லி விடுவிக்கிறார்.
இஸ்ராயேல் மக்கள் பாபிலோனிய நாட்டில் அடிமைகளாக இருந்தபோது உரிமையிழந்து, மண்ணிழந்து, மனிதமிழந்து வாழ்ந்த மக்களுக்கு இறைவாக்கினர்கள் வாயிலாக உங்களை மீட்க அரசர் ஒருவர் வருவார் என ஆறுதல்கூறி மனத்தின் சோர்வினை நீக்குகின்றார்.
இயேசுவும் ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள், துயறுருவோரே நீங்கள் பேறுபெற்றவர்கள், அழுபவர்களே நீங்களும் பேறுபெற்றவர்கள் என்று ஆறுதல் கூறுகிறார். இதன்வழி மக்களை கடவுளின் பிள்ளைகள் என்பதை உணரசெய்து மன நோயை குணப்படுத்துகிறார்.
விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்ணிடம் நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம், இனிப் பாவம் செய்யாதீர்” (யோவா 8:11) என சொல்லி புதுவாழ்வு தருகிறார்.

நீர் அரசுரிமையோடு வரும்போது என்னை நினைவுகூறும் என்ற நல்லக்கள்வனிடம் “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்கும் சொல்கிறேன்” என வாழ்வு கொடுக்கிறார் (லூக் 23:43).

ஆம்! அன்பார்ந்தவர்களே இறைவனின் வார்த்தையானது உடல் நோயிலிருந்தும், உள்ள நோயிலிருந்தும் குணம் அளித்திருக்கின்றார். இறைவார்த்தை ஆற்றல்மிக்கது. குணமளிக்கக் கூடியது. ஆறுதல் தரக்கூடியது. வாக்கு மனிதரானார். நம்மிடையே குடிக்கொண்டார் என்பதற்கினங்க, நம்மை வாழ்விக்க இறைவார்த்தை வழிசெய்கிறது.
இன்றையக் காலக்கட்டத்தில் இறைவார்த்தையின் வல்லமையில் எண்ணற்ற மக்கள் குணம் பெற்றுள்ளனர் என்பதற்கு ஏராளமாக சான்றுகள் உள்ளன. செபக்கூட்டத்திற்கும், அன்பிரவு வழிபாட்டிற்கும், உபவாச நற்செய்தி கூட்டத்திற்கும் மக்கள் செல்கின்றனர். இறைவார்த்தைக்கு செவிமடுக்கின்றனர். நிறைய மக்கள் இறைவார்த்தையின் மீது கொண்ட நம்பிக்கையில் குணம் பெறுகின்றனர், சான்று பகர்கின்றனர். என்னிடமிருந்த ஓயாத தலைவலி நீங்கியது. வயிற்றுவலி நீங்கியது என பலரும் வார்த்தையின் வல்லமையில் குணம் பெற்று இறைவனுக்கு முன் சான்று பகர்கின்றனர். இறைவன் தன்னுடைய பணியாளர்களின் மூலம் வல்லமையுள்ள செயல்களை செய்கிறார்.
பிரியமானவர்களே!
இயேசு நோய்களை நீக்கும் மருத்துவர் மறுவாழ்வு கொடுக்கும் வள்ளல். இதே மருத்துவப்பணியை நமக்கு கொடுத்து சென்றுள்ளார். இன்று நம்முடைய வார்த்தைகள் மற்றவரை மகிழ்விக்கக் கூடியதாக இருக்கிறதா? (அ) வேதனை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.
நம்முடைய வார்த்தைகள் பிறருக்கு ஆறுதல் தரக்கூடியதாக இருக்கின்றதா?
ஆகவே நம்முடைய வாழ்விலே இறைவார்த்தை வெளிப்படட்டும் அதன்வழி பிறர் வாழ்வு பெறட்டும்.
மேலும் இறைவார்த்தையில் வேரூன்றுவோம். உடல் நோய்களை நீக்குவோம். உள்ள வேதனைகளை நீக்குவோம் பாவங்களை களைவோம். இறைவனில் குணமாவோம்.

Thursday 21 April 2011

இயேசுவின் திருவுடல் திருஇரத்தத்தின் பிரசன்னம், வல்லமை



புதுநன்மை வாங்கவிருந்த ஒரு சிறுவனிடம், நற்கருணையில் யார் இருக்கின்றார்?  என்று கேட்டதற்கு, அவர் இயேசு இருக்கின்றார் என்று மிக அழகாகப் பதில் சொன்னான். மீண்டும் அவனிடம், இயேசு நற்கருணையில் எப்படி இருக்கின்றார்?  என்று கேட்டதற்கு, அவன் நல்லாத்தான் இருக்கிறார் என்றான்.  

திருமண ஓலை எழுதவந்த மாப்பிள்ளையிடம் ‘நற்கருணையில் யார் இருக்கின்றார்?  என்று பங்கு சாமியார் கேட்டார்.  அவன் ‘அந்தோனியார்’ என்றான். அவனுடையஅப்பாவை கூட்டிவர  சொன்னார். அப்பாவும் வந்தார்.  பங்கு சாமியார் அவரிடம், உங்க பிள்ளையின் இலட்சனத்தை பாருங்க!  நற்கருணையில் யாருடா இருக்கார் என்று கேட்டால் ‘அந்தோணியார’; என்கிறான்.  அப்பா கோபத்துடன் மகனிடம் ஏண்டா முட்டால் அப்பவே சொன்னேன் நற்கருணையில் ‘சகாயமாதா இருக்காங்கன்னு’ சொல்லுடா என்று கேட்டாதானே! என்றார்.

இயேசுவின் திருவுடலையும் திரு இரத்தத்தையும் பெறபோகும் என் அன்புக்குரிய பிள்ளைகளே!

இயேசு நம் ஒவ்வொருவருக்கும் சாகாமைக்கு மருந்துக் கொடுக்கிறார். முடிவில்லா வாழ்வை பெறுவதற்கு மருந்து கொடுக்கிறார். இறைவனோடு என்றும் ஒன்றித்திருப்பதற்கான மருந்து கொடுக்கிறார்.  இறைவனின் செல்ல பிள்ளைகளாக வாழ மருந்து கொடுக்கின்றார்.

ஒருமுறை முனிவர் ஒருவர் சாகாமைக்கு மருந்துகண்டுபிடித்துவிட்டேன். சாக விருப்பமில்லாதவர்கள் என்னிடம் வாருங்கள் எனக் கூறினார்.  அன்று அந்த ஊர் மக்கள் அனைவரும் முனிவர்முன் நின்றனர்.  அவரும் நிதானமாக அவர்களிடம் நீங்கள் சாகாமல் இருக்க வேண்டுமெனில் பிறவாமல் இருந்திருக்க வேண்டும் என்றாராம்.

இயேசு சாகாமைக்கு மூன்றுவகை மருந்து கொடுக்கின்றார். 
1.யோவான் 11:25-26-ல் சொல்லுவார் “உயிர்த்தெழத் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே. என்னிடம் நம்பிக்கைக் கொள்பவர்கள் இருப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைக் கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் என்கிறார்.  எனவே முதல் மருந்தாக அசையாத, ஆணித்தரமான, உறுதியான முறையில் இளைவன்மீது நம்பிக்கைக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.  
2.யோவா 8:51-ல் கூறுவார் “என் வார்த்தையைக் கடைபிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்லுகிறேன்” என்கிறார்.  எனவே இரண்டாவது மருந்தாக இறைவார்த்தையை படித்து அல்லது கேட்டு அதன்படி வாழ வேண்டும் என்கிறார்.
3.யோவா 6:48,50,54-ல் கூறுவார் வாழ்வுதரும் உணவு நானே.விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வுதரும் உணவு நானே.  இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றமே வாழ்வார்.  எனது கதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்கைக் கொண்டுள்ளார்” என்கிறார்.

எனவே என் அன்புக்குரியவர்களே! இறைவனின் தொடர்ந்துவாழ இறைவன் இயேசு தரும் இந்த மூன்று மருந்தும் மனிதனுடைய வாழ்க்கைக்கு இன்றியமையாத மருந்தாக இருக்கிறது.  இந்த மூன்று மருந்துகளும் தனித்தனியாக செயலாற்றும் தன்மை கொண்டதல்ல. மாறான ஒன்றையொன்று சார்ந்து வாழ்வு தரக்கூடிய மருந்தாக இருக்கிறது.

எனவே இறைவாக்கையும் நற்கருணையில் இயேசுவின் பிரசன்னத்தையும் நம்ப வேண்டும்.  இறைவாக்கு நம்பிக்கை கொள்வதற்கான உறுதிபாட்டைக் கொடுக்கிறது. நற்கருணை விசுவாசத்திற்கும்.  இறைவாக்கிற்கும் மையமாக இருந்து செயல்படுகிறது.  

ஆகவே பிரியமான சகோதரமே! விசுவாசத்தை இழந்து வார்த்தையை வாழ்வாக்கவோ (அ) நற்கருணை உட்கொள்ளவோ முடியாது.  அப்படி செய்தாலும் அது பயணற்றது.  எனவே நற்கருணை இறைவனோடு உறவு ஏற்பட செய்கிறது.  நற்கருணை வழியாக இறைவன் நம் ஒவ்வொரு உள்ளத்திலும் குடிக்கொள்கிறார்.  இதனால் நமது இதயங்கள் இறைவன் வாழும் தூய ஆலயமாக மாறுகின்றது.

நம்முடைய இதயங்கள் இறைவன் வாழும் ஆலயமாக இருக்க வேண்டுமெனில் எப்போதும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.  எப்போதும் தூய்மையாக வைத்திருப்பது என்பது நமது பொறுப்பாகும்.  ஏதோ ஒரு மாதம் மறைக்கல்வி வகுப்பிற்கு சென்றோம்.  முடிந்தளவு படித்தோம். தெரிந்தோம் இன்றோடு எல்லாம் நிறைவேறிந்து என்று முடிவுக்கு வராமல், இனிமேல்தான் எக்காலமும் இறைவன் வாழ்வதற்காக உள்ளத்தை தயாரித்த நிலையிலேயே இருக்க வேண்டும்.

ஒருமுறை நெப்போலியனிடம் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்த நாள் எதுவென கேட்டதற்கு, தான் இயேசுவை முதன்முதலாக எனது உள்ளத்தில் வாங்கிய அந்த நாளே, நான் மகிழ்ச்சியாக இருந்த நாள் என்றாராம்.  அதுபோல நமக்கு இன்று மகிழ்ச்சியான நாள்.  இந்த நாளுக்காக காத்திருந்தும், இறைவனை பெற்றுக் கொண்டோம் என்ற மகிழ்வோடு இருக்க, இறைவன் நம்மில் குடிகொள்ள வேண்டும்.  அதற்கு உள்ளம் தூயதாக இருக்க வேண்டும்.

பகைவர்கள் எதிர்த்து போராடியபோது, நெப்போலியனின் படைவீரன் ஒருவன் எதிரியிடம் சிக்கி கொண்டான்.  அப்போது உனது தலைவன் போர்புரியும் இரகசியத்தை சொல் என மிரட்டினர்.  அவன் சொல்வதாக இல்லை.  இறுதியில்  துப்பாக்கியால் உன் இதயத்தை பிளந்து விடுவோம் என்று மிரட்டினர்.  எதற்கும் அஞ்சாத அந்த போர்வீரன் நான்.  எந்த இரகசியத்தையும் சொல்லமாட்டேன். என் இதயத்தை பிளந்து பாருங்கள்.  அங்கே என்னை வழிநடத்தும் தலைவர் நெப்போலியன் இருப்பார் என்றான். ஒரு தலைவன் மீது போர்வீரன் நம்பிக்கையை இந்த நிகழ்வு தெளிவுப்படுத்துகிறது.  அதுபோல இயேசுவை உள்ளத்தில் பெறப்போகும் நீங்களும், பெற்ற நாங்களும் உறுதிபாட்டோடு வாழ்ந்து இயேசுவுக்கு சான்று பகர வேண்டும்.

மரத்தைப் பற்றிக் கொண்டு வளரும் செடியைப்போல, புயல் வீசினாலும் வெள்ளம் வந்தாலும் வளைந்து கொடுத்து வளரும் நாணல்போல, பட்டுபோன மரத்தை சாயவிடாமல் தாங்கி நிற்கும் ஆலமரத்தின் விழுதுகள்போல, இயேசுவை உள்ளத்தில் பெற்று நாம் எந்த நிலையிலும் சூழலிலும் நம்பிக்கையை இழக்காமல் வாழந்து, தூய்மையான உள்ளம் கொண்டு வாழ உறுதிக்கொண்டோம்.  அதற்காக செபிப்போம்.

நற்கருணையில் மன்னித்தல் வாழ்வு


நற்கருணையில் மன்னித்தல் வாழ்வு

ஒருமுறை ஊர் பண்ணையாருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக போனது சாமியாரை அவஸ்தைக்கு அழைத்து வந்தார்கள். பண்ணையாருக்கும், அவரது தம்பிக்கும் பெரிய சண்டை நடந்தது. இதனை நினைவில் கொண்டு பங்கு சாமியார், நீ உன் தம்பியை மன்னித்தால்தான் நான் உனக்கு நன்மையும், அவஸ்தையும் கொடுப்பேன் என்றார். பண்ணையாரோ சாகும் தருவாயில்கூட மன்னிக்க மாட்டேன் மறுத்துவிட்டார். சாமியாரும் விடாப்பிடியாக நானும் அவஸ்தை தரமாட்டேன் என்றார். வேறுவழியில்லை.

பண்ணையார் தனது மகனைப் பார்த்து, பேய் நான் அவனை மன்னித்துவிடுகிறேன். நீ ஒரு கை பார்த்துக்க விட்டுவிடாதே என்றானாம்.

இயேசுவில் பிரியமானவர்களே!

இயேசு எதற்காக நற்கருணையை ஏற்படுத்தினார்? அவர் நம்மை அன்பு செய்கிறார். நாமும் அன்பு செய்ய விரும்புகிறார். நம்மோடு ஓர் தொடர்ந்த உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறார். நம்மோடு தொடர்ந்த ஒரு பிரசன்னத்தோடு உடனிருக்க விரும்புகிறார். ஆகவே நம்மோடு தொடர் உறவு கொள்ள அதுவும் உடன்படிக்கை உறவு கொள்ள, தொடர் பிரசன்னத்தோடு இருக்க தன்னையே அப்ப இரச வடிவில் கொடுக்கிறார்.

இறைவனுக்கும் நமக்குமிடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பிளவு ஏற்பட்டுள்ளது. சிதைவு ஏற்பட்டுள்ளது. இந்த பிளவுக்கு காரணம் நாம் நம்முடைய பாவச் செயல்கள் அதாவது இறைவனது விருப்பத்திற்கு எதிரான செயல்கள். ஆனால் இறைவன் நம்மை பகையாளியாக பார்க்கவில்லை. தவறிவிட்டவன் என கைவிடவுமில்லை. மாறாக நம்முடைய தவறை மன்னிக்கிறார். தனது மகனையே பாவப்பரிகார பலியாக அளிக்கின்றார்.

இயேசுவே சொல்லுவார்: இது எனது உடல். இது எனது இரத்தம். இதை உண்ணுங்கள், பருகுங்கள். ஏனெனில் இது புதிய நித்திய உடன்படிக்கையின் அடையாளம். மேலும் பாவ மன்னிப்புக்கென்று உங்களுக்காகவும், எல்லோருக்கும் கொடுக்கிறேன் என்கிறார். எனவே நற்கருணை மன்னிப்பு வாழ்வினை கொண்டுள்ளது என்பதை அறிகிறோம்.

இயேசுவின் மன்னிப்பு தன்மையை விவிலிய பார்வையில் நோக்கும்போது தெளிவாக தெரியும்.

இயேசு கிறிஸ்து மானிட பீட்டர். மானிடராகிய நமக்காகவும் நமது மீட்பிற்காகவும் வானகமிருந்து வையகம் வந்தார். மீட்பு என்பது பாவ மன்னிப்பில் அடங்கியுள்ளது.

இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது பாவங்களை மன்னித்தார். முடக்குவாதமுற்றவரை நோக்கி, மகனே! உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன (மாற் 2:5) என்றும் பாவியான பெண்ணை நோக்கி “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” (லூக்7:48) என்றும், விபசாரத்தில் கையும் மெயுமாக பிடிப்பட்ட பெண்ணிடம் நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம் இனி பாவம் செய்யாதீர் “(யோவா 8:11) என்று கூறினார்.

பாவங்களை மன்னிக்கத் தனக்கு வல்லமை உண்டு என்பதை இயேசு எண்பித்தார் (மத் 9:6).

கிறிஸ்து பாவிகளை தேடிச் சென்றார். நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்” (லூக் 5:32) இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார் (லூக் 19:10) என்றார்.

- பாவிகளின்மேல் கடவுளுக்குள்ள இரக்கத்தையும் பரிவன்பையும் பல உவமைகள் வழியாக விளக்கியுள்ளார். (எ.கா) காணாமல் போன ஆடு, காசு, மகன்.

- இறுதியாக, “நம் குற்றங்களுக்காகவும் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார். நம்மை தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழ செய்தார் (உரோ 4:25) பாவ மன்னிப்புக்காகத் தம் இரத்தத்தில் புதிய உடன்படிக்கையின் பலியை ஏற்படுத்தினார். (மத் 26:28) “சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும், விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார் (கொலோ 1:20). எனவே இயேசு பாவங்களை மன்னித்து நம்மை தனது சுவிகார பிள்ளைகளாக ஏற்றக்கொள்கிறார்.

நாம் தவறு செய்து விலகிப் போகும்போதுகூட காணாமல் போன ஆட்டை (அ) காசைத் தேடுவதுபோல இறைவன் நம்மை தேடி வருகிறார். மேலும் பிரிந்து சென்ற திரும்பி வருவான் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் ஊதாரி தந்தைப்போல இறைவன் நமக்காக காத்திருக்கின்றார்.

ஓர் ஊரிலே திருடுவதற்காகத் திருடர்கள் நடுதெருவுக்குச் சென்றனர். அத்தெருவில் நடுவிலிருந்த வீட்டின் கதவு பாதி திறந்திருந்தது. அவர்கள் அவ்வீட்டினுள் நுழைந்தனர். அவ்வீட்டில் ஒரு பெண்மணி மட்டும் தனியாக தூங்கிக் கொண்டிருந்தாள். திருடர்கள் அவளை எழுப்பி ஏன் அவள் தனியாக, அதுவும் வீட்டின் கதவைப் பாதிதிறந்து வைத்துக் கொண்டு தூங்குகிறார் என்று கேட்டனர். அதற்கு அப்பெண், ஒரு வாரத்திற்குமுன் என் மகன் வீட்டைவிட்டு எங்கேயோ போய்விட்டான். அவன் திரும்பி வரும்போது வீடு சாத்தியிருந்தான் ஒருவேளை அவன் வீட்டின்கதவை தட்டாமலே திரும்பி போய்விடுவான். அவன் எப்போது திரும்பி வந்தாலும் அவனுக்காக இ;நத வீடு மட்டுமல்ல, என் இதயமும் திறந்திருக்கிறது” என்று கண்ணில் கண்ணீர் மல்கக் கூறினார். தாயின் இதயம் தனயனுக்காக எப்போதும் திறந்திருக்கிறது.

இயேசுவில் பிரியமானவர்களே!

இயேசுவின் இருதயம் இரக்கம் நிறைந்தது அவ்விதயம் என்றும் மூடுவதில்லை. இயேசு சிலுவையின் உயிர்நீத்த போது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாக கிழிந்தது (மாற் 15:38) இனிமேல் இறைவனுக்கும் மனிதருக்கும் இடையே திரை ஏதுமில்லை. எனவே நற்கருணையில் நமக்காக திறந்தமனதுடன் காத்திருக்கின்றார்.

நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ள காத்திருக்கும் இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? மனது திருந்தி திரும்பி வருதலை எதிர்பார்க்கிறார். அப்பா உனக்கு எதிராகவும் வானகத்துக்கு எதிராகவும் குற்றம் செய்தேன் எனக் கூறும் ஊதாரி மகனைப்போல திரும்பி வரவேண்டும். ஆண்டவரே, நான் பாவி என் மேல் இரக்கமாயினும் என்று வானத்தை அண்ணாந்து பார்க்ககூட துணியாமல் செபித்த பாவியைப்போல நம்முடைய குற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு நாம் திரும்பி வரும்போது ஊதாரி தந்தையைப்போல, பழைய உரிமையான வாழ்வை நமக்கு கொடுப்பார்.

நீர்தான் அம்மனிதன் என்று நாத்தான் இறைவாக்கினர் சொன்னதும், தாவீது மன்னன் மனமாறி தனது தவறை ஏற்றுக்கொண்டான். பேதுரு, மும்முறை மறுதவிப்பாய் என்ற இயேசு கூறிய வார்த்தையை நினைவு கூர்ந்ததும், மனம் நொந்து அழுதார்.

எனவே நாம் இறைவனிடம் திரும்பி வரும் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ள நற்கருணையில் காத்திருக்கிறார். நாம் மீட்பு பெற தன்னையே இழந்தார். அதன்வழி நமக்கு வாழ்வை பெற்றுக் கொடுத்துள்ளார். எனவே திரும்பி வருவோம் மன்னிப்பு பெற்று புது வாழ்வு வாழ்வோம் ஆமென்.

நற்கருணை



கிறிஸ்து இயேசுவில் பிரியமானவர்களே!

நற்கருணை என்றால் என்ன?  என்று உங்களை கேட்டோமானால், ஒவ்வொருவரும் மனதை உருக்கும் அளவில் உங்கள் கருத்துக்களை சொல்வீர்கள்.  எப்படியெனில் ‘இயேசுவை என்னில் பெறுகிறேன்’ (அ) என்னை காத்து அன்பு செய்யும் இறைவன் என்னுடைய இதயத்திற்கு வருகிறார்! என்பீர்கள்.  நற்கருணை உங்களுக்கு என்ன செய்கிறது என்று மேலும் ஓர் கேள்வியினை வைத்தால், நீங்கள் அனைவரும், நற்கருணை எங்கள் ஆன்ம நலனையும், உடல் நலனையும் தருகிறது.  ‘அல்லது மகிழ்வை தருகிறது’ என்று நீங்கள் சொன்ன உங்கள் கருத்து தவறில்லை.  சரியானது தான், ஆனால் அதுவல்ல.  இன்றைய விழாவானது முக்கிய பங்கை வகிக்கிறது.  அதாவது இந்த வாழ்வானது இயேசுவின் இலட்சியத்தை பிரதிப்பலிக்கின்றது.  கி.பி.4ஆம் நூற்றாண்டில் வெறுமனே பகிர்தலாக இருந்த இந்த அடையாளம் கி.பி 10-ஆம் நூற்றாண்டில் பலி என்ற கருத்தினை அதிகமாக வலியுறுத்தியது.  இந்த 20-ம் நூற்றாண்டில் உணவு என்ற மையக்கருத்தானது 3-ம் உலக நாடுகளில் அர்த்தம் தருவதாக விளக்கம் கொண்டிருக்கிறது.  இந்த விழாவினை கொண்டாடும் இத்தருணத்தில் இது தருகின்ற செய்தி எது என்று சிந்திப்பது பொருத்தமாகும்.

1. நான் மக்களை ஒன்றிணைக்க வந்Nதுன், உலகில் உங்கள் பிறப்பு எந்த செய்தியைக் கொடுக்க போகின்றது.
2. புதிய விடியலே எனது உயர்ந்த இலக்காக அமைந்தது.  உங்கள் வாழ்வின் இலக்கு என்ன?
3. நான் பலியாக்கப்பட்டேன்.  என்னைப்போல் நீங்களும் பலியாக்கப்படுவீர்களா? என்ற மூன்று சிந்தனைகளை நம்மை பார்த்து இயேசு கேட்கின்றார்?

முதலாவதாக நான் மக்களை ஒன்றிணைக்க வந்தேன்.  இவர்களை
ஒன்று சேர்த்து சமத்துவம், சகோதரத்துவம் படைக்க வந்தேன் என்கிறார் நம்பிரான் இயேசு.  அராபியர்களிடம் ஒரு நல்லப் பழக்கம் இருந்தது.  ஓர் அராபியன் மற்றொருவனுக்கு உப்பு வழங்கி அவனுடன் ஒன்றாக உண்டால் அவர்கள் இருவருமே பிரிக்க முடியாத நண்பர்கள் ஆவார்கள்.  இதை முறிப்பது பெரும் பாதகமாகக் கருதப்பட்டது.  ஒன்றாக அமர்ந்து உண்பது மனிதர்களுக்குள் அன்பையும், ஒற்றுமையும் வளர்கின்ற ஒரு சிறந்த செயல்.  தி.பணி 2ஃ42யை வாசித்தோமென்றால் திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும்,  அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள் என வாசிக்க கேட்கிறோம்.  நமது சமுதாயத்திலும், பங்கிலும் பல்வேறுப்பட்ட மக்கள் இருக்கின்றனர்.  ஆனால் நாம் எப்படி இருக்கின்றோம்?  என்னோடு சரிசமமாய் அமர வேண்டுமா?  அடிவிழும.; நீ படிக்காதவன், நான் படித்தவன.; உழைப்பிற்கு தகுந்த ஊதியம் வேண்டுமா?  உதை விழும், நான் முதலாளி, நீ தொழிலாளி கலப்பு திருமணமா?  சழுத்துக்கு கத்தி வரும். நீ உயர்ந்த சாதி, நான் தாழ்த்தப்பட்ட சாதி என்ற வேறுபாடுகளும் முரண்பாடுகளும் அதிகமாக உள்ளன.

ஆனால் 1 கொரி 10ஃ11ல் பார்த்தோமென்றால் நாம் பலராயினும் ஒரே உடலாய் உள்ளோம்.  நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் பங்கு பெறுகிறோம்.  கலா 3ஃ28-ல் கூட “இனி உங்களிடையே யூதர் என்றும், கிரேக்கர் என்றும் அடிமைகள் என்றும், உரிமை குடிமக்கள் என்றும் இல்லை.  ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடில்லை.  கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாக இருக்கின்றீர்கள்.  இவ்வாறு விவிலியத்தில் நம் இயேசு நாம் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என கூறுகிறார்.  ஆனால் நம் குடும்பத்தில், நம் பங்கில் நாம் ஒன்றாக வாழ்கின்றோமா என்பதை இந்நேரத்தில் சிந்திப்போம்.

இரண்டாவதாக, புதிய விடியலுக்கு இலட்சியமாக இலக்காக இருக்கின்றேன் என இயேசு நம்மைப் பார்த்து கூறுகின்றார்.  சமுதாயமானது கறை படிந்து காணப்படுகிறது.  எங்கும் எதிலும் பிளவுகள், சாதிய வேர்கள் ஆங்காங்கே செயல்பட்டு, வீரிய இயக்கங்களை வெட்டி சாய்க்கின்றன.  ஆலப்போல படர்ந்துவர வேண்டிய சமத்துவத்திற்கு வெந்நீர் ஊற்றப்படுகிறது.  பல்வேறு ஆதிக்க சக்திகள் நம்மை பகடைக் காய்களாக பயன்படுத்துகின்றன.  அதை நாம் பார்த்துக் கண் இருந்தும் குருடர்களாய் காதுயிருந்தும் செவிடர்களாய், வாயிருந்தும் ஊமைகளாய் இருந்துக்கொண்டு இருக்கிறோம்.  நாம் பலமுறைகளில் இப்பங்கில் ஆற்ற வேண்டிய கடமைகளை புறக்கணிக்கும் ஒரு கிறித்துவன் தனது அயலானுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை, ஏன் இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை புறக்கணித்தவன் ஆகின்றான், என்பதை நாம் மறந்து விடாமல் புதிய விடியலுக்காக நமது கடமையை ஆற்ற வேண்டுமென இயேசு நம்மிடம் கூறுகின்றார்.

மூன்றாவதாக நான் பலியாக்கப்பட்டேன் என இயேசு, கூறுகின்றார்.  1976-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் வட பகுதியில் ஒரு பயங்கர நிலடுக்கம் ஏற்பட்டது.  ஆயிரக்கணக்கான வீடுகள் நொடிப்பொழுதில் இடிந்து விழுந்தன.  மலைகள் பிளந்தன.  பாவங்கள் தகர்ந்தன.  சாலைகள் துண்டிக்கப்பட்டன.  பல மக்கள் இறந்தனர்.  அப்போது ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது.  அங்கே கண்ட காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.  தகர்ந்த கட்டிடங்கள் அடியில் ஒரு தாய் மண்டியிட்டு குப்புற கவிழ்ந்தவாறு கிடந்தார்.  அவருக்கு அடியில் அழுது கொண்டிருக்கும் ஒரு குழந்தை தாயை உடனே தூக்கி பார்த்ததில் உயிரில்லை என்றார்கள்.  பூமியிழந்து வீடிழந்து விழுவதைக் கண்ட அந்ததாய் எப்படியாவது வாழ போகின்ற தன் குழந்தையை காப்பாற்றி விடவே என்ற முனைப்பில் குழந்தையை கீழே கடத்தி தன் உடலால் அதைக் காத்திருக்கின்றார்.

இன்றைய நற்செய்தியிலும் கூட, வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன்.  அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர் என வாசிக்கிறோம்.  நாம் கேட்ட நிகழ்ச்சியிலே குழந்தை வாழ்வதற்காக தாய் தனது உயிரையே தியாகம் செய்து இருக்கின்றார் என்பது தெளிவாக இருக்கின்றது.  பழைய ஏற்பாட்டில் காயின், ஆபேல், காய், கனி, மிருகம் போன்றவற்றை பலியிட்டார்கள். அவ்வாறே நோவே, ஆபிரகாம், மோசே பலியினைப் பற்றியும் வாசிக்கின்றோம், இந்த பலிக்கெல்லாம் முத்தாய்ப்பாக இயேசுவின் சிலுவைப்பலி நிறைவாக இருக்கின்றது.  பலி வாழ்வில் தான் வாழ்வு மலர்வதையும் நாம் காண்கிறோம்.

மத்திய பிரதேசத்தில் 1991-ல்  தொழிற்சங்கத் தலைவர் சங்கர்குகா நியோகி பலியானார்.  இவர் பலியானதற்கு காரணம் என்ன?  தொழிலாளிகளை இணைத்தார்.  உரிமைகளை மீட்டெடுக்க போராட வைத்தார்.  விழிப்புணர்வு அளித்தார்.  இறுதியில் வீட்டிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.  இதைப்போல் நெஸ்டர் பாசுவும் தன்னுடைய நாட்டுக்காக தனது மனைவியையும் விட்டுவிட்டு காட்டிலே தியோ போன்று என்ற படையில் தன்னையும் இணைத்து போராடினார்.  உணவில்லாமலே தனது உயிரை நாட்டிற்காக பலியாக்கினார்.  இதைப்போல் இன்றும் கூட பலர் இச்சமுதாயம் முன்னேற தங்களையே பலியாக்கி கொண்டிருக்கின்றார்கள்.  என்பது நமக்கு தெரியும்.  ஆனால் இவர்களில் வாழ்வு மலர்கின்றது என்பதை நாம் ஒருபோதும் மறந்து விட கூடாது.

எனவே அன்பார்ந்தவர்களே!  நம் சமுதாயம் முன்னேற வேண்டுமென்றால் நாம் நம்மையே பலியாக்க முன்வர வேண்டும்.  தியாகம் நிறைந்த செயல்களை இவ்வுலகுக்கு அளித்திட வேண்டும்.  மக்களாகிய நாம் அனைவரும் முதலில் ஒன்றினைய வேண்டும்.  அதற்கு முன் நம் குடும்பங்களில் முதலில் தியாக உணர்வு, குடும்ப உணர்வு வளர வேண்டும்.  அப்போதுதான் நாம் வாழ்கின்ற இச்சமுதாயத்தில் தம்முடைய பணி மற்றவர்களுக்கு பயன்பெறும்படியாக அமைய முடியும். 

பொது தீர்வையின்போது ஆண்டவர் நம்மிடம் நீ செபமாலை செய்தாயா?  பூசைக்கு வந்தாயா?  என்னை உண்பாயா?  நவநாள் செய்தாயா?  என்பதை கேட்பதற்கு மேலாக பசித்த உள்ளங்களுக்கு உணவு தந்தியா?  ஒதுக்கப்பட்டவனை அரவணைத்தாயா?  இப்பங்கில் ஒற்றுமையை நிலைகாட்டினாயா?  பிறருடைய துன்பத்தில் கலந்து கொண்டாயா?  என்றுதான் கேட்க போகின்றார்.  எனவே பிரியமானவர்களே!  இவ் நற்கருணை விழாவில் பிறருடைய வளர்ச்சியில் பங்கு கொண்டு, நம்மிடையே நாம் பலியாக்க முன் வருவோம்.  எல்லா 
வல்ல இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து அன்பிலும் நீதியிலும் வழி நடத்துவாராக.  ---- ஆமென்.