Thursday 21 April 2011

நற்கருணையில் மன்னித்தல் வாழ்வு


நற்கருணையில் மன்னித்தல் வாழ்வு

ஒருமுறை ஊர் பண்ணையாருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக போனது சாமியாரை அவஸ்தைக்கு அழைத்து வந்தார்கள். பண்ணையாருக்கும், அவரது தம்பிக்கும் பெரிய சண்டை நடந்தது. இதனை நினைவில் கொண்டு பங்கு சாமியார், நீ உன் தம்பியை மன்னித்தால்தான் நான் உனக்கு நன்மையும், அவஸ்தையும் கொடுப்பேன் என்றார். பண்ணையாரோ சாகும் தருவாயில்கூட மன்னிக்க மாட்டேன் மறுத்துவிட்டார். சாமியாரும் விடாப்பிடியாக நானும் அவஸ்தை தரமாட்டேன் என்றார். வேறுவழியில்லை.

பண்ணையார் தனது மகனைப் பார்த்து, பேய் நான் அவனை மன்னித்துவிடுகிறேன். நீ ஒரு கை பார்த்துக்க விட்டுவிடாதே என்றானாம்.

இயேசுவில் பிரியமானவர்களே!

இயேசு எதற்காக நற்கருணையை ஏற்படுத்தினார்? அவர் நம்மை அன்பு செய்கிறார். நாமும் அன்பு செய்ய விரும்புகிறார். நம்மோடு ஓர் தொடர்ந்த உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறார். நம்மோடு தொடர்ந்த ஒரு பிரசன்னத்தோடு உடனிருக்க விரும்புகிறார். ஆகவே நம்மோடு தொடர் உறவு கொள்ள அதுவும் உடன்படிக்கை உறவு கொள்ள, தொடர் பிரசன்னத்தோடு இருக்க தன்னையே அப்ப இரச வடிவில் கொடுக்கிறார்.

இறைவனுக்கும் நமக்குமிடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பிளவு ஏற்பட்டுள்ளது. சிதைவு ஏற்பட்டுள்ளது. இந்த பிளவுக்கு காரணம் நாம் நம்முடைய பாவச் செயல்கள் அதாவது இறைவனது விருப்பத்திற்கு எதிரான செயல்கள். ஆனால் இறைவன் நம்மை பகையாளியாக பார்க்கவில்லை. தவறிவிட்டவன் என கைவிடவுமில்லை. மாறாக நம்முடைய தவறை மன்னிக்கிறார். தனது மகனையே பாவப்பரிகார பலியாக அளிக்கின்றார்.

இயேசுவே சொல்லுவார்: இது எனது உடல். இது எனது இரத்தம். இதை உண்ணுங்கள், பருகுங்கள். ஏனெனில் இது புதிய நித்திய உடன்படிக்கையின் அடையாளம். மேலும் பாவ மன்னிப்புக்கென்று உங்களுக்காகவும், எல்லோருக்கும் கொடுக்கிறேன் என்கிறார். எனவே நற்கருணை மன்னிப்பு வாழ்வினை கொண்டுள்ளது என்பதை அறிகிறோம்.

இயேசுவின் மன்னிப்பு தன்மையை விவிலிய பார்வையில் நோக்கும்போது தெளிவாக தெரியும்.

இயேசு கிறிஸ்து மானிட பீட்டர். மானிடராகிய நமக்காகவும் நமது மீட்பிற்காகவும் வானகமிருந்து வையகம் வந்தார். மீட்பு என்பது பாவ மன்னிப்பில் அடங்கியுள்ளது.

இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது பாவங்களை மன்னித்தார். முடக்குவாதமுற்றவரை நோக்கி, மகனே! உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன (மாற் 2:5) என்றும் பாவியான பெண்ணை நோக்கி “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” (லூக்7:48) என்றும், விபசாரத்தில் கையும் மெயுமாக பிடிப்பட்ட பெண்ணிடம் நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம் இனி பாவம் செய்யாதீர் “(யோவா 8:11) என்று கூறினார்.

பாவங்களை மன்னிக்கத் தனக்கு வல்லமை உண்டு என்பதை இயேசு எண்பித்தார் (மத் 9:6).

கிறிஸ்து பாவிகளை தேடிச் சென்றார். நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்” (லூக் 5:32) இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார் (லூக் 19:10) என்றார்.

- பாவிகளின்மேல் கடவுளுக்குள்ள இரக்கத்தையும் பரிவன்பையும் பல உவமைகள் வழியாக விளக்கியுள்ளார். (எ.கா) காணாமல் போன ஆடு, காசு, மகன்.

- இறுதியாக, “நம் குற்றங்களுக்காகவும் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார். நம்மை தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழ செய்தார் (உரோ 4:25) பாவ மன்னிப்புக்காகத் தம் இரத்தத்தில் புதிய உடன்படிக்கையின் பலியை ஏற்படுத்தினார். (மத் 26:28) “சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும், விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார் (கொலோ 1:20). எனவே இயேசு பாவங்களை மன்னித்து நம்மை தனது சுவிகார பிள்ளைகளாக ஏற்றக்கொள்கிறார்.

நாம் தவறு செய்து விலகிப் போகும்போதுகூட காணாமல் போன ஆட்டை (அ) காசைத் தேடுவதுபோல இறைவன் நம்மை தேடி வருகிறார். மேலும் பிரிந்து சென்ற திரும்பி வருவான் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் ஊதாரி தந்தைப்போல இறைவன் நமக்காக காத்திருக்கின்றார்.

ஓர் ஊரிலே திருடுவதற்காகத் திருடர்கள் நடுதெருவுக்குச் சென்றனர். அத்தெருவில் நடுவிலிருந்த வீட்டின் கதவு பாதி திறந்திருந்தது. அவர்கள் அவ்வீட்டினுள் நுழைந்தனர். அவ்வீட்டில் ஒரு பெண்மணி மட்டும் தனியாக தூங்கிக் கொண்டிருந்தாள். திருடர்கள் அவளை எழுப்பி ஏன் அவள் தனியாக, அதுவும் வீட்டின் கதவைப் பாதிதிறந்து வைத்துக் கொண்டு தூங்குகிறார் என்று கேட்டனர். அதற்கு அப்பெண், ஒரு வாரத்திற்குமுன் என் மகன் வீட்டைவிட்டு எங்கேயோ போய்விட்டான். அவன் திரும்பி வரும்போது வீடு சாத்தியிருந்தான் ஒருவேளை அவன் வீட்டின்கதவை தட்டாமலே திரும்பி போய்விடுவான். அவன் எப்போது திரும்பி வந்தாலும் அவனுக்காக இ;நத வீடு மட்டுமல்ல, என் இதயமும் திறந்திருக்கிறது” என்று கண்ணில் கண்ணீர் மல்கக் கூறினார். தாயின் இதயம் தனயனுக்காக எப்போதும் திறந்திருக்கிறது.

இயேசுவில் பிரியமானவர்களே!

இயேசுவின் இருதயம் இரக்கம் நிறைந்தது அவ்விதயம் என்றும் மூடுவதில்லை. இயேசு சிலுவையின் உயிர்நீத்த போது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாக கிழிந்தது (மாற் 15:38) இனிமேல் இறைவனுக்கும் மனிதருக்கும் இடையே திரை ஏதுமில்லை. எனவே நற்கருணையில் நமக்காக திறந்தமனதுடன் காத்திருக்கின்றார்.

நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ள காத்திருக்கும் இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? மனது திருந்தி திரும்பி வருதலை எதிர்பார்க்கிறார். அப்பா உனக்கு எதிராகவும் வானகத்துக்கு எதிராகவும் குற்றம் செய்தேன் எனக் கூறும் ஊதாரி மகனைப்போல திரும்பி வரவேண்டும். ஆண்டவரே, நான் பாவி என் மேல் இரக்கமாயினும் என்று வானத்தை அண்ணாந்து பார்க்ககூட துணியாமல் செபித்த பாவியைப்போல நம்முடைய குற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு நாம் திரும்பி வரும்போது ஊதாரி தந்தையைப்போல, பழைய உரிமையான வாழ்வை நமக்கு கொடுப்பார்.

நீர்தான் அம்மனிதன் என்று நாத்தான் இறைவாக்கினர் சொன்னதும், தாவீது மன்னன் மனமாறி தனது தவறை ஏற்றுக்கொண்டான். பேதுரு, மும்முறை மறுதவிப்பாய் என்ற இயேசு கூறிய வார்த்தையை நினைவு கூர்ந்ததும், மனம் நொந்து அழுதார்.

எனவே நாம் இறைவனிடம் திரும்பி வரும் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ள நற்கருணையில் காத்திருக்கிறார். நாம் மீட்பு பெற தன்னையே இழந்தார். அதன்வழி நமக்கு வாழ்வை பெற்றுக் கொடுத்துள்ளார். எனவே திரும்பி வருவோம் மன்னிப்பு பெற்று புது வாழ்வு வாழ்வோம் ஆமென்.

0 comments:

Post a Comment