Friday 22 April 2011

இறைவார்த்தை குணமளிக்கிறது


வீட்ல பையன் நேரமாகியும் தூங்கிக்கொண்டிருந்தான். அம்மா பையனை எழுப்பியும் எழுந்திருக்க வில்லை. இறுதியாக இயேசு சொன்னதுபோல சொன்னால் செய்வானோ என நினைத்துக் கொண்டு, “மகனே! உன் படுக்கையை எடுத்துக்கொண்டு போ” என்றார். மகன் மட்டும் குறைஞ்சவனா! அம்மா! எனது நேரம் இன்னும் வரலையம்மா என பதில் கூறினான்.

சிலர் படிக்கும்முன்போ, ஊருக்கு போகுமுன்போ (அ) மற்றநேரங்களில் விவிலியத்தை புரட்டுவார்கள். கண்களை மூடிக்கொண்டே திறப்பார்கள். கைலைத்து அந்த பகுதியை வாசிப்பார்கள். அப்படி ஒருத்தன் மனக்கஷ்டத்துல விவிலியத்தை பிரித்து படித்தான். அதில் மத் 27:5-ல் அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக்காசுகளை கோவிலில் எறிந்துவிட்டு, புறப்பட்டு போய்த் தூக்குப்போட்டுக் கொண்டான்” என்றிருந்தது. இது சரியல்ல நினைத்து, மீண்டும் மூடி திறந்து படித்தான். அதில் லூக் 10:37-ல் “நீரும்போய் அப்படி செய்யும்” என்றிருந்தது. மனக் கஷ்டத்துடன் மூன்றாம்முறை மூடிதிறந்தான். யோவான் 13:27-ல் நீ செய்ய விரும்புவதை விரைவில் செய்” என்றிருந்தது.

இன்று இறைவார்த்தை பலவிதங்களில் புரிந்துகொள்ளப்படுகின்றன. சிலநேரங்களில் தவறாகவும் புரிந்துகொள்கின்றனர். ஆனால் இறைவார்த்தை வாழ்வளிக்கிறது. வழிகாட்டுகிறது, நம்பிக்கையளிக்கிறது, ஆற்றலலிக்கிறது, விடுதலை அளிக்கின்றது. என பலவழிகளில் இறைவார்த்தையை பற்றி சிந்திக்கின்றோம். இதனடிப்படையில் இன்று இறைவார்த்தை குணமளிக்கிறது என்று சிந்திக்கிறோம்.
ஏசாயா 55:10-11-ல் வாசித்தோமெனில் “மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன. அவை நிலத்தை நனைத்து முறை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல் அங்கு திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தை, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை”.

ஆம் அன்பார்ந்தவர்களே! இறைவனிடமிருந்து புறப்பட்டுவரும் இறைவார்த்தை குணமளிக்கிறது. இருவிதத்தில் குணமளிக்கிறது. ஒன்று, உடல் நோயிலிருந்து இறைவார்த்தை குணமளிக்கிறது. இரண்டு, மனநோயிலிருந்து குணமளிக்கிறது.
முதலாவதாக இறைவார்த்தை உடல்நோயிலிருந்து குணமளிக்கிறது. இதற்கு பலசான்றுகள் விவிலியத்தில் உண்டு. இயேசுவின் வாழ்வின் செயல்பாடுகளை பார்க்கின்றபோது, பல நேரங்களில் குணமளிக்கின்ற மருத்துவப் பணியைச் செய்திருக்கின்றார்.
விடுதலை பயணம் 15:26-ல் “உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீ அக்கறையுடன் செவிசாய்த்து அவர் பார்வையில் நலமாக தோன்றுவதைச் செய்து, அவர் கட்டளைகளைக் கைக்கொண்டால், நான் எகிப்திற்கு வரச்செய்த கொள்ளை நோய்களை உன்மேல் வரவிடமாட்டேன். ஏனெனில் நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர் என்கிறார்.
இணைச்சட்டம் 32:39-ல் “நானே இருக்கிறவர்.... எனத் தொடர்ந்து கூறுகிறார் “குணமாக்குபவரும் நானே” என்கிறார். திருப்பாடல் 103:23-ல் “என் உயிரே! ஆண்டவரை போற்றியும்! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே. அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார். உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.” இறைவாக்கினரது வார்த்தையில் நம்பிக்கை வைத்து ‘நாமான்’ குணமடைந்ததை 2 அரசர் 5-ம் அதிகாரத்தில் பார்க்கின்றோம்.
புதிய ஏற்பாட்டிற்கு வருகின்றபோது இயேசு பல புதுமைகள் அற்புதங்கள் செய்து மக்களை நோயிலிருந்து குணமளித்துள்ளார் என்பது பார்க்க முடியும்.
மத் 8:16-ல் பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிபோயின. மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினார்”.
லூக் 7:6-ல் நூற்றுவர் தலைவர் தம் பணியாளனை குணமாக்கவந்த இயேசுவிடம் “நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை, ஆனால் ஒரு வார்த்தை சொல்லும். என் ஊழியர் நலமடைவர்” என்கின்றார்.
மத் 4:23-ல் “அவர் கலிலேயட் பகுதி முழுவதும் சுற்றி வந்தார். அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார். விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார். மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்”.
இவ்வாறு இயேசுவின் குணமாக்கும் செயலை சொல்லிக்கொண்டே போகலாம். தன்னுடைய வார்த்தையினால், கட்டளையினால் நோய்களை நீக்கினார், பேய்களை ஓட்டினார். இத்துனை செயல்களிலும் இயேசு விரும்புகிறேன் என்றும், செய்ய முடியும் என நம்புகிறாயா என்று வினவியும் குணப்படுத்தினார் என்பதை பார்க்க முடியும்.
இரண்டாவதாக, மனநோயிலிருந்து குணப்படுத்தினார். இஸ்ராயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்து வேதனைப்பட்டப்போது உள்ளத்தில் வேதனையும், உடலில் சோர்வும், எதிர்காலம் பற்றிய கேள்வியிலும் வாழ்ந்து வந்தனர். இந்த நேரத்தில் எகிப்தில் என் மக்களின் கூக்குரலை கேட்டேன், அவர்களை விடுதலை செய்து பாலும், தேனும் பொழியும் கானான் தேசத்தில் சமர்த்துவேன் என்று ஆறுதல் சொல்லி விடுவிக்கிறார்.
இஸ்ராயேல் மக்கள் பாபிலோனிய நாட்டில் அடிமைகளாக இருந்தபோது உரிமையிழந்து, மண்ணிழந்து, மனிதமிழந்து வாழ்ந்த மக்களுக்கு இறைவாக்கினர்கள் வாயிலாக உங்களை மீட்க அரசர் ஒருவர் வருவார் என ஆறுதல்கூறி மனத்தின் சோர்வினை நீக்குகின்றார்.
இயேசுவும் ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள், துயறுருவோரே நீங்கள் பேறுபெற்றவர்கள், அழுபவர்களே நீங்களும் பேறுபெற்றவர்கள் என்று ஆறுதல் கூறுகிறார். இதன்வழி மக்களை கடவுளின் பிள்ளைகள் என்பதை உணரசெய்து மன நோயை குணப்படுத்துகிறார்.
விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்ணிடம் நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம், இனிப் பாவம் செய்யாதீர்” (யோவா 8:11) என சொல்லி புதுவாழ்வு தருகிறார்.

நீர் அரசுரிமையோடு வரும்போது என்னை நினைவுகூறும் என்ற நல்லக்கள்வனிடம் “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்கும் சொல்கிறேன்” என வாழ்வு கொடுக்கிறார் (லூக் 23:43).

ஆம்! அன்பார்ந்தவர்களே இறைவனின் வார்த்தையானது உடல் நோயிலிருந்தும், உள்ள நோயிலிருந்தும் குணம் அளித்திருக்கின்றார். இறைவார்த்தை ஆற்றல்மிக்கது. குணமளிக்கக் கூடியது. ஆறுதல் தரக்கூடியது. வாக்கு மனிதரானார். நம்மிடையே குடிக்கொண்டார் என்பதற்கினங்க, நம்மை வாழ்விக்க இறைவார்த்தை வழிசெய்கிறது.
இன்றையக் காலக்கட்டத்தில் இறைவார்த்தையின் வல்லமையில் எண்ணற்ற மக்கள் குணம் பெற்றுள்ளனர் என்பதற்கு ஏராளமாக சான்றுகள் உள்ளன. செபக்கூட்டத்திற்கும், அன்பிரவு வழிபாட்டிற்கும், உபவாச நற்செய்தி கூட்டத்திற்கும் மக்கள் செல்கின்றனர். இறைவார்த்தைக்கு செவிமடுக்கின்றனர். நிறைய மக்கள் இறைவார்த்தையின் மீது கொண்ட நம்பிக்கையில் குணம் பெறுகின்றனர், சான்று பகர்கின்றனர். என்னிடமிருந்த ஓயாத தலைவலி நீங்கியது. வயிற்றுவலி நீங்கியது என பலரும் வார்த்தையின் வல்லமையில் குணம் பெற்று இறைவனுக்கு முன் சான்று பகர்கின்றனர். இறைவன் தன்னுடைய பணியாளர்களின் மூலம் வல்லமையுள்ள செயல்களை செய்கிறார்.
பிரியமானவர்களே!
இயேசு நோய்களை நீக்கும் மருத்துவர் மறுவாழ்வு கொடுக்கும் வள்ளல். இதே மருத்துவப்பணியை நமக்கு கொடுத்து சென்றுள்ளார். இன்று நம்முடைய வார்த்தைகள் மற்றவரை மகிழ்விக்கக் கூடியதாக இருக்கிறதா? (அ) வேதனை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.
நம்முடைய வார்த்தைகள் பிறருக்கு ஆறுதல் தரக்கூடியதாக இருக்கின்றதா?
ஆகவே நம்முடைய வாழ்விலே இறைவார்த்தை வெளிப்படட்டும் அதன்வழி பிறர் வாழ்வு பெறட்டும்.
மேலும் இறைவார்த்தையில் வேரூன்றுவோம். உடல் நோய்களை நீக்குவோம். உள்ள வேதனைகளை நீக்குவோம் பாவங்களை களைவோம். இறைவனில் குணமாவோம்.

0 comments:

Post a Comment